எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8¼ லட்சம் டயர்கள் திருட்டு
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பலில் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.8.29 லட்சம் டயர்கள் திருட்டு போனது.;
1,500 டயர்கள் ஏற்றுமதி
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கப்பல்கள் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி 1,500 டயர்கள் கன்டெய்னர் லாரி மூலம் பிரேசில் நாட்டுக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
495 டயர்கள் திருட்டு
இந்த கப்பல் பிரேசில் நாட்டை சென்று அடைந்த நிலையில் அங்கு டயர்களை ஆர்டர் செய்த கம்பெனி ஊழியர்கள், கன்டெய்னர் பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அனுப்பபட்ட 1,500 டயர்களில் 495 டயர்கள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் காணாமல் போன டயர்கள் குறித்து தகவல் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கம்பெனி மேலாளர் நாராயணன் (வயது 30) ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
அவரது உத்தரவின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவியை ஆய்வு செய்தனர். இதில் டயர்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி வல்லூர்- காட்டுப்பள்ளி சாலையில் புழுதிவாக்கம் பகுதியில் சில மணி நேரம் நின்று பின்னர் துறைமுகத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே திருட்டு சம்பவத்தில் லாரி டிரைவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன 495 டயர்களின் மதிப்பு ரூ.8 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.