710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கம் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

Update: 2024-01-30 10:41 GMT

சென்னை,

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்து உள்ள கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பஸ் முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்.

அதாவது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் அதிகப்படியான பஸ்களும், அதன்பிறகு பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்களும் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பஸ் முனையத்தில் இருந்து பின்வரும் வழித்தடங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:

சென்னையில் இருந்து திருச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 118 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 18 பஸ்களும், சேலத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 66 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 17 பஸ்களும், விருத்தாசலத்திற்கு 30 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 6 பஸ்களும், கள்ளக்குறிச்சிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 50 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 16 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதே போன்று, விழுப்புரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 59 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 16 பஸ்களும், கும்பகோணத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 52 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14 பஸ்களும், சிதம்பரத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 21 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 5 பஸ்களும் இயக்கப்படுகின்றன. நெய்வேலிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 46 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 11 பஸ்களும், திண்டிவனம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 32 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 5 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேலும், திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 35 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 10 பஸ்களும், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 125 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 22 பஸ்களும், பெங்களூருக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 30 பஸ்களும், வந்தவாசிக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 46 பஸ்களும், போளூர் மற்றும் வந்தவாசிக்கு மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மொத்தத்தில் 710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், 160 பஸ்கள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன (இந்த 870 பஸ்களும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது) என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் செங்கல்பட்டு வழியாக பல்வேறு வழித்தடங்களில் 710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்றும், வடசென்னை மக்கள் வசதிக்காக மாதவரத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகள் கிளாம்பாக்கம் வந்து செல்ல வசதியாக பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், முடிச்சூரில் ஆம்னி பஸ்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இதனிடையே மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வழியாகத்தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை பகுதி மக்களின் வசதிக்காகவே விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 160 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பஸ்கள் மற்றும் சேலம், கும்பக்கோணம் கோட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன.

இது தவிர இ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் பூந்தமல்லி வழியாக வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி, திருத்தணி, செய்யாறு உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்