அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார். இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை போனதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 10ம் தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்து சபீருல்லா உள்பட 11க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது உள்ளிட்ட தகவல்கள் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே சபீருல்லாவை மீட்டு தரக்கோரி நண்பர் ஹலிதீன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், கர்நாடகாவில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துபோவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அன்பு ஜோதி ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.