விவசாயி வீட்டில் 7¾ பவுன் நகைகள்-ரூ.50 ஆயிரம் திருட்டு
விவசாயி வீட்டில் 7¾ பவுன் நகைகள்-ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.;
உப்பிலியபுரம்:
நகைகள்- பணம் திருட்டு
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் அண்ணாநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 53). விவசாயி. இவர், தனது மனைவி சரோஜாவுடன் விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணம் முடிந்து தண்டலைப்புத்தூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மகளை பார்க்க தண்டலைப்புத்தூருக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை சுப்பிரமணி வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இது பற்றி சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது மனைவியுடன் சிக்கத்தம்பூரில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது, மரக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உள்ளே உள்ள கதவின் பூட்டையும் உடைத்து அங்குள்ள பீரோவின் ஒரு பக்க கதவை நெம்பி உடைத்து, பீரோவின் ரகசிய அறையில் வைத்திருந்த தலா 3 பவுன் சங்கிலிகள் 2, 1 பவுன் மோதிரம், முக்கால் பவுன் தோடு என 7¾ பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
வங்கி கடனை அடைக்க...
இது குறித்த தகவலின்பேரில் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மணி தலைமையில், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் குற்றப்பிரிவு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக சுப்பிரமணி வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.