வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-03-31 18:45 GMT

ஊட்டி, 

சிறுமியை கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி கொலை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நாடுகாணி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26). இவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து சென்றபோது ராஜ்குமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்குமார் சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அருகில் இருந்த தனியார் எஸ்டேட்டுக்கு சென்று இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதில் சிறுமி இறந்து விட்டார். மயங்கி கிடந்த ராஜ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் ராஜ்குமார் குணமடைந்தார்.

7 ஆண்டு சிறை

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானரவி தங்கதுரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்று விஷம் கொடுத்து கொலை செய்ததாக ராஜ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை கடத்தி கொலை செய்த ராஜ்குமாருக்கு, கடத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 5 ஆண்டு சிறை தண்டனை, சிறுமியை தற்கொலைக்கு தூண்டுதல் சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பில் கூறினார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் முகமது ஆஜராகி வாதாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்