திண்டிவனம் அருகேஅடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் காயம்போக்குவரத்து பாதிப்பு

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

திண்டிவனம், 

வாகனங்கள் மோதல்

விழுப்புரம் வரதப்பநாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவபாதம்(வயது 57). இவரும் விழுப்புரம் சிவபடை தெருவை சேர்ந்த நாகப்பன்(51) என்பவரும் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மொபட்டில் அச்சரப்பாக்கம் கோவிலுக்கு புறப்பட்டனர்.

திண்டிவனம் அடுத்த கரிக்கம்பட்டு அருகே சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே நடந்து வந்த ஒருவர் மீது மொபட் மோதியது. இதில் சிவபாதம், நாகப்பன் மற்றும் நடந்து வந்தவர் என 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர்.

அந்த சமயத்தில் இவர்களுக்கு பின்னால் வந்த கார் மொபட் மீது மோதி நின்றது. அப்போது அதன் பின்னால் வந்த மற்றொரு கார், லாரி, கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ், கார், மற்றொரு அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த சங்கிலி தொடர் விபத்தால் 7 வாகனங்களும் சேதமடைந்தன.

10 பேர் காயம்

இந்த விபத்தில் மொபட்டில் வந்த சிவபாதம், நாகப்பன் மற்றும் அரசு பஸ்சில் வந்த வளவனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, பஸ் கண்டக்டரான வடலூரை சேர்ந்த செந்தில்குமார்(50), பயணிகள் பெருமாள்(40), ரமணி(38), பலராமன்(61), ஜெயபிரகாஷ்(28) உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்