மத்தியஅரசு அதிகாரி வீட்டில் 7 பவுன் நகை-ரூ.16 ஆயிரம் திருட்டு

தஞ்சை அருகே மத்தியஅரசு அதிகாரி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

Update: 2023-07-18 19:55 GMT

தஞ்சை அருகே மத்தியஅரசு அதிகாரி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியஅரசு அதிகாரி

தஞ்சையை அடுத்த மாப்பிள்ளைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் அய்யப்பன் (வயது56). இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றினார். பணியின் காரணமாக அவர் பெங்களூருவில் தங்கி இருந்தார்.

விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு அய்யப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான மாப்பிள்ளைநாயக்கன்பட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார்.

நகை-பணம் திருட்டு

ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அய்யப்பன் விஜயவாடாவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். உடனே அவர்கள் இந்த தகவலை அய்யப்பனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விஜயவாடாவில் இருந்து புறப்பட்டு மாப்பிள்ளைநாயக்கன்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அய்யப்பன் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்