விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை கொள்ளை

சின்னசேலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-06-01 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே ராயப்பனூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பர் வீட்டு திருமண விழாவுக்கு குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் அங்கிருந்து இரவு திரும்பி வந்துபார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் வீட்டுக்குள் சென்று துரைசாமி பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

இதில் துரைசாமி வீட்டை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்