முத்தூர் அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு, பெரியகாங்கயம்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கூட்டம் கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
7 ஆடுகளை கடித்து குதறியது
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட செல்வக்குமாரகவுண்டன்வலசு கிராமம் புங்கங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சாமியாத்தாள். (வயது 67). விவசாயி. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் சாமியாத்தாள் தோட்டத்துக்குள் 3 வெறிநாய்கள் கூட்டமாக திடீரென்று புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள் அருகில் உள்ள ரவி (50) என்ற விவசாயியின் 2 வெள்ளாடுகள் மற்றும் பெரியகாங்கயம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்ற விவசாயியின் 1 செம்மறி ஆட்டையும், பூபதி என்பவரின் 1 வெள்ளாட்டையும் தலைப்பகுதி, கழுத்துப்பகுதி, உடம்பு பகுதி ஆகிய இடங்களில் கடித்து குதறியது.
இதுபற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த வெறிநாய் கூட்டம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. மேலும் வெறிநாய் கூட்டம் கடித்து இறந்த 7 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும்..
உரிய நடவடிக்கை
மேலும் வெறிநாய் கூட்டம் கடித்து குதறியதில் உயிரிழந்த 7 ஆடுகளுக்கும் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் உட்பட பல்வேறு கால்நடைகளை கடித்து குதறும் இதுபோன்ற வெறி நாய்கள் கூட்டத்தை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.