'நாடோடிகள்' சினிமா பாணியில் நண்பனுக்காக கல்லூரி மாணவியை கடத்திய 7 பேர் கைது
முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று சினிமா பட பாணியில் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.;
சேலம்,
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் அரி அரவிந்த் (வயது 23). பட்டுச்சேலைக்கு டிசைன் வைக்கும் வேலை செய்து வந்தார். இவரும், இளம்பிள்ளையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரகதீஷ்வரியும் (21) காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அரி அரவிந்தை கண்டித்ததுடன், காதலனை சந்திக்க மாணவிக்கும் தடை விதித்தனர்.
மாணவிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அதற்காக ஜலகண்டாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பேசி முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் மாப்பிள்ளை வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. அதற்காக மாணவியின் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு 2 கார்களில் சென்றனர்.
கார், சின்னப்பணிக்கனூர் பகுதியில் சென்றபோது அங்கு 4 மோட்டார் சைக்கிள்கள் திடீரென வந்து 2 கார்களையும் மறித்தபடி நின்றது. 4 மோட்டார் சைக்கிளில் இருந்து 8 பேர் கீழே இறங்கினர். இதில் அரி அரவிந்த் மட்டும் முகமூடி அணியவில்லை. மற்ற 7 பேரும் முகமூடி அணிந்து இருந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் 2 கார்களையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். பின்னர் காரில் இருந்த கல்லூரி மாணவியை அரி அரவிந்த் உள்ளிட்டவர்கள் தூக்கினர். மாணவியின் தங்கை அவர்களை தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது.
பின்னர் மாணவியை தூக்கிக்கொண்டு அந்த கும்பல் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது. இந்த சம்பவம் சினிமா பாணியில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் வீட்டார் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தனர். காயம் அடைந்த மாணவியின் தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மாணவியை கடத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவியை கடத்த அரி அரவிந்துக்கு உதவிய நண்பர்கள் இடங்கணசாலை பகுதியை சேர்ந்த கவுதம் (19), விஜயகுமார் (28), கவுதம் பிரகாஷ் (27), கவுதம் (27), சஞ்சய் (19), தீபன்ஸ்ரீ (19), மணிகண்டன் (29) ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அரி அரவிந்த் தான் காதலித்த மாணவிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும், அதனை தடுத்து திருமணம் செய்து கொள்ள உதவும்படி நண்பர்களிடம் கேட்டுள்ளார். அப்போது நண்பர்கள் கூடிப்பேசி எப்படி பெண்ணை அழைத்து செல்லலாம் என்று ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அவர்களது திட்டத்தின்படி அரவிந்த் மட்டும் முகமூடி அணியாமல் மற்றவர்கள் முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று சினிமா பட பாணியில் திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் வகுத்த திட்டத்தின்படி மாணவியை கடத்தி சென்றுள்ளனர்.
நண்பர்களை போலீசார் கைது செய்தாலும் அரி அரவிந்தும், மாணவி பிரகதீஷ்வரியும் மாலை மாற்றி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் எந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு நண்பர்கள் உதவினார்களா? அல்லது கடத்தி வந்து ஏதாவது ஒரு பஸ்சில் ஏற்றி அவர்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தனரா? இல்லை சேலம் மாவட்டத்தில் எங்காவது காதல் தம்பதி பதுங்கி இருக்கிறார்களா? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் 'நாடோடிகள்' சினிமாவில் நண்பன் காதலித்த பெண்ணை 4 வாலிபர்கள் கடத்தி சென்று திருமணம் செய்து வைத்த காட்சியை நினைவூட்டுவதாக இருந்தது.