பிற்படுத்தப்பட்ட மக்களின் 69 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்காது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பிற்படுத்தப்பட்ட மக்களின் 69 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு விட்டுக்கொடுக்காது என அமைச்சர் ராஜகண்னப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-12 09:43 GMT

மதுரை,

மதுரை முத்துப்பட்டியில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ.23 லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கடந்த ஆட்சியை விட திறம்பட செயல்பட்டு வருகின்றன. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை சார்பிலான பள்ளிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இன்று மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழக முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் 1356 பள்ளிகளிலும், விடுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்