முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு: குமரி வீரர்கள் 680 பேர் மாநில போட்டிக்கு தேர்வு

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து 680 பேர் தேர்வாகி உள்ளனர்.

Update: 2023-06-29 18:33 GMT

நாகர்கோவில்,

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து 680 பேர் தேர்வாகி உள்ளனர்.

விளையாட்டு போட்டி

குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள மொத்தம் 18 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து, கால் பந்து உள்பட 20 விளையாட்டு போட்டிகள் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டன.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-வது பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

கலெக்டர்

இந்த நிலையில் அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றவர்கள் சென்னையில் 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில் மொத்தம் 680 பேர் தேர்வாகி உள்ளனர். இதில் முதற்கட்டமாக 68 பேர் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மூலம் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டனர். அவர்களை கலெக்டர் ஸ்ரீதர் வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மீனாட்சிபுரம் பணிமனை மேலாளர் தமிழ்ச்செல்வன், நீச்சல் பயிற்சியாளர் ஆலிவாசன், தடகள பயிற்சியாளர் கோமதி மற்றும் விளையாட்டு அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் பரிசு

இதுபற்றி விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கூறுகையில், "சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகள் நடக்கின்றன. அந்த போட்டிகளில் பங்கேற்கும் வகையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு செல்லும் வீரர்களுக்கு பயண செலவு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. சென்னையில் நடக்கும் மாநில போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், 2-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்