620 பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருச்சியில் தகுதிச்சான்று வழங்குவதற்காக 620 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கொள்ளிடம் டோல்கேட், ஜூன்.26-
திருச்சியில் தகுதிச்சான்று வழங்குவதற்காக 620 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கூட்டாய்வு
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே கூத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் திருச்சி மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் திருச்சி மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா, லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் லால்குடி, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் மணப்பாறை வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து 620 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தகுதிச்சான்று
இதில் பள்ளி பஸ்களில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை பெட்டி, தீயணைப்பான் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து காலாவதியான உபகரணங்கள் வைத்திருக்கும் பள்ளி பஸ்கள் மற்றும் வேறு குறைபாடுகள் உள்ள பஸ்களை ஆய்வில் இருந்து நிராகரித்து தகுதிச்சான்று அளிக்க வேண்டாம் எனவும், அனைத்து விதிமுறைகளின்படி செயல்படும் பஸ்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றுகள் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பள்ளி மாணவர்கள் சிரமம் இன்றி பஸ்சில் ஏறும் வகையில் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும். பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள வேக கட்டுப்பாடு கருவி, கண்காணிப்பு கேமரா, அவசர வழி கதவு போன்றவற்றை முறையாக பராமரித்து செயல்படுத்த வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழிப்புணர்வு
முன்னதாக முகாமில் கலந்துகொண்ட பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் மத்தியில் வாகனங்களை முறையாக பராமரிப்பது, விபத்து ஏற்படும் காரணத்தை கண்டறிந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது, விபத்து காலங்களில் எவ்வாறு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். தீயணைப்பானை பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்து செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீரங்கம் அருண்குமார், லால்குடி முகமது மீரான், திருச்சி மேற்கு ராஜாமணி, திருச்சி கிழக்கு செந்தில், மணப்பாறை சத்தியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொட்டியம்
இதேபோல் தொட்டியம் மற்றும் முசிறி பகுதிகளில் இயங்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனங்கள் தரம் குறித்த ஆய்வு தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி வாகனங்களை முசிறி கோட்டாட்சியர் மாதவன், மோட்டார் வாகன ஆய்வாளர் குண்டுமணி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 110 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 13 வாகனங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் வாகனத்தில் உடன் வரும் உதவியாளர் ஆகியோருக்கு சாலை விதிகள் குறித்து கடைபிடிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. ஆய்வின் போது முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டுஅருள்மணி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.