600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வேலூரில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அங்கு சென்று தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.என்.பாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே 12 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தாசில்தார் சத்தியமூர்த்தி திறந்து பார்த்தார். அதில், ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 12 மூட்டைகளில் இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.