விருத்தாசலத்தில் முத்திரையிடப்படாத 60 மின்னணு தராசுகள் பறிமுதல்

விருத்தாசலத்தில் முத்திரையிடப்படாத 60 மின்னணு தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-08-18 15:59 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள கடைகளில் முத்திரையிடப்படாத தராசு மற்றும் எடை அளவு கற்கள் பயன்படுத்தப்படுவதாக தொழிலாளர் நலத்துறைக்கு புகார் சென்றது. அதனை தொடர்ந்து கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமார், விருத்தாசலம் துணை ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் சார்லி, கடலூர் முத்திரை ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருத்தாசலம் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மின்னணு தராசுகள், எடை கற்கள், தராசுகள் ஆகியவை முத்திரையிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.

60 தராசுகள் பறிமுதல்

இதில் 50 மின்னணு முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரிகள் பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள 10 மளிகை கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 10 மின்னணு தராசுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் இனி வரும் காலங்களில் முத்திரையிட்ட தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீண்டும் முத்திரையிடப்படாத தராசுகளையும், எடை கற்களையும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்