விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நாட்டு வெடிகுண்டு வீச்சு
விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் அப்பு என்ற பரணிதரன் (வயது 22). இவர் தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் பிரசாந்த் (28) என்பவருடன் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ரெயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவுடியான நாராயணசாமி (28) என்பவர், பரணிதரனை கொலை செய்யும் நோக்கத்துடன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினார். அந்த நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்து சிதறியதில் அப்பகுதி முழுவதும் பெரும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதில் பரணிதரன் பலத்த காயத்துடனும், பிரசாந்த் லேசான காயத்துடனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 பேர் சிக்கினர்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இச்சம்பவத்தில் நாராயணசாமியுடன் அவரது கூட்டாளிகளான கண்டம்பாக்கம் மணிமாறன் மகன் மாதேஷ் (20), குணசீலன் மகன் முருகையன் (25), புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்தி (22), பிரபு மகன் தமிழரசன் (22), பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் வசந்த்குமார் (21), விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்த அன்புச்செல்வன் மகன் கணேஷ் (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாராயணசாமி உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்த நிலையில் மாதேஷ், முருகையன், கார்த்தி, வசந்த்குமார், தமிழரசன், கணேஷ் ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-
பரபரப்பு தகவல்
பிரபல ரவுடியான நாராயணசாமி, கண்டம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அவ்வப்போது கத்தியை காட்டி மிரட்டுவதும், வீண் தகராறு செய்வதுமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட 5 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாராயணசாமி பற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். இதையறிந்த நாராயணசாமி, அந்த 5 பேரையும் மிரட்டி தன் மீதான புகாரை வாபஸ் பெறச்செய்துள்ளார். அதன் பிறகும் நாராயணசாமி, கத்தியுடன் அப்பகுதியில் வலம் வந்து பொதுமக்களிடம் வீண் தகராறு செய்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பரணிதரனுக்கும், நாராயணசாமிக்கும் குடிபோதையில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதமானது. மேலும் பரணிதரன், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி அப்பெண்ணின் உறவினர் ஒருவர், நாராயணசாமியிடம் கூறவே அவர், பரணிதரனிடம் பிரச்சினை செய்து இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனால் பரணிதரன் உறவினர்கள், நாராயணசாமியை தாக்க முயன்றபோது அவர், விழுப்புரம் பானாம்பட்டில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அங்கு பரணிதரன் உறவினர்கள் சென்றபோது அங்கிருந்து நாராயணசாமி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அங்கிருந்த அவரது மோட்டார் சைக்கிளை, தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சில நாட்கள் கழித்து நாராயணசாமி, போலீஸ் நிலையம் சென்று தனது மோட்டார் சைக்கிளை அனுமதியின்றி எடுத்துச்சென்று விட்டார். இதுபற்றி பரணிதரனிடம் இருந்து போலீசார், புகாரை பெற்று பதிவு செய்துள்ளனர். இதனால் பரணிதரன் மீது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை தீர்த்துக்கட்ட நாராயணசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர், தனது கூட்டாளிகளை அழைத்து வந்து கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுத்திருந்த பரணிதரன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாதேஷ் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நாராயணசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.