டிரைவரை கொலை செய்த 6 பேர் கைது

கடலூரில் முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் டிரைவரை கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-04 19:04 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் நாகப்பன் மகன் பாஸ்கர் (வயது 34), டிரைவர். இவரது மனைவி ஜிந்தா பிரித்தி (23). கடந்த 3 மாதத்திற்கு முன்பு பாஸ்கரின் உறவினர் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவகுரு மகன் விஷ்ணு உள்ளிட்ட 3 பேர் நடனம் ஆடியுள்ளனர். இதை பார்த்த ஜிந்தா பிரித்தியின் தம்பி அஜய் என்கிற அன்பரசன், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அஜய், கடைக்கு சென்ற போது, அவரை விஷ்ணு, பூமிநாதன், இவரது தம்பி பிரேம்குமார் என்கிற நக்கீரன் ஆகியோர் ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த ஜிந்தா பிரித்தி, பாஸ்கரன் மற்றும் இவரது உறவினர்கள் அன்பரசன் (22), சுபிதா, நர்மதா, நேதாஜி (25), குப்புசாமி மனைவி மகாலட்சுமி, செல்வா என்கிற செல்வக்குமார், அஜித்குமார், வித்யாதரன் உள்ளிட்டோர் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.

டிரைவர் சாவு

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு, சிவகுரு, பத்மநாபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுத்தியல், உருட்டுக்கட்டையால் பாஸ்கர், மகாலட்சுமி, நேதாஜி, அன்பரசன், செல்வா, அஜித்குமார் உள்ளிட்டோரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாஸ்கர், மகாலட்சுமி, நேதாஜி, அஜித்குமார், செல்வா, அன்பரசன் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் (50) ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மற்ற 6 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 பேர் கைது

இதுகுறித்து ஜிந்தா பிரித்தி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிவகுரு, பத்மநாபன் (47), விஷ்ணு (19), சுனில் (23), பிரேம்குமார் (24), தானம் நகரை சேர்ந்த அருண் (31) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் அன்பரசன் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்