6 கிரவுண்ட் இடத்திலும் இயற்கை விவசாயம் செய்ய முடியும் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதனை
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர் 6 கிரவுண்ட் இடத்தில் இயற்கை விவசாயம் செய்து சாதனை புரிந்துள்ளார்.;
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 1973-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று மதுரையில் பயிற்சி பெற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் சப்-கலெக்டராகவும், அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டராகவும் பணி அமர்த்தப்பட்டார். பின்னர், சென்னை மாநகராட்சி கமிஷனர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயலாளர், மத்திய அரசின் கனிம வளத்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்.
தனது ஐ.ஏ.எஸ். பணி ஓய்வுக்கு பின்னரும் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக பணிபுரிந்தவர். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 3 மிகப்பெரும் ஆளுமைகளும் முதல்-அமைச்சராக இருந்தபோது, அவர்களோடு பணிபுரிந்த அனுபவம் மிக்கவர் தான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர்.
இவர் தனது ஓய்வுக்கு பிறகு சென்னை அடுத்து உள்ள படுவூரில் தனக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பயிற்சி மற்றும் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தனது இயற்கை விவசாய பண்ணையில், 8 வகை கீரைகள், 4 வகை தானியங்கள், 2 வகை நெல் மற்றும் பல்வேறு காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து தாவர பூங்கா, திருநீறு பச்சிலை, கருந்துளசி, இன்சுலின், லெமன் கிராஸ், கடுக்காய், தான்றிக்காய் உள்ளிட்ட 23 வகை மூலிகை செடிகளைக் கொண்ட மூலிகை பூங்கா, 27 நட்சத்திரங்களுக்கான பரிகார மரங்களைக் கொண்ட நட்சத்திர மரப் பூங்கா, காளான் பூங்கா, மியாவாக்கி காடு, தேனீக் கூடுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம், நகர்ப்புறங்களில் இருக்கும் சிறிய இடங்களில் (6 கிரவுண்ட்) கூட இயற்கை பண்ணை விவசாயம் செய்ய முடியும் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்த ஷீலா நாயர் சாதனை படைத்துள்ளார்.
இந்த இயற்கை விவசாய பண்ணையை சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் உள்பட ஏராளமானோர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். அவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் படுவூரில் அமைந்துள்ள இந்த இயற்கை விவசாய பண்ணையில் நேற்று சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஐ.டி. துறை மற்றும் பல்வேறு துறையில் வேலை பார்த்துவிட்டு இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் தேர்ந்து எடுத்துள்ளவர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.