காஞ்சீபுரத்தில் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பி ஓட்டம்; உதவியாளர், காவலாளி பணியிடை நீக்கம்

காஞ்சீபுரத்தில் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பி ஓடினர். இது தொடர்பாக காப்பக உதவியாளர், காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-04-07 08:53 GMT

காப்பகம்

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் இயங்கி வருகிறது அன்னை சத்யா குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம். ஆதரவற்ற பெண்கள் தங்கள் கல்வி நிலையை தொடர இங்கு தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தினரின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இங்கு குழந்தைகள், சிறுமிகள் என 29-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகள் காதல் பிரச்சினையில் குழந்தைகள் நல குழுமத்தினரால் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஆதரவற்றவர்கள் ஆவார். இவர்கள் வழக்கமாக பள்ளிகளுக்கு சென்று வருவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்று விட்டனர்.

தப்பி ஓட்டம்

அதிகாலை வேளையில் பாதுகாவலர் இரவு பணியில் இருந்தபோது அங்கு தங்கியிருந்த 6 சிறுமிகள் பாதுகாவலரின் அறையை தாழிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.இதுகுறித்து பாதுகாப்பு மையத்தில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் ஒரு சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஒரு சிறுமி அவரது பெற்றோரால் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பணியிடை நீக்கம்

இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக காப்பக உதவியாளர் தீனா தேவி மற்றும் காவலாளி சுரேஷ்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்