பாம்பனில் 5-வது நாளாக குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பகுதியில் 5-வது நாளாக சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.;
ராமேசுவரம்,
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பகுதியில் 5-வது நாளாக சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.அது போல் வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 5-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் 800-க்கும் அதிகமான விசைப்படகு மற்றும் 400-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல ஊர்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் 5-வது நாளாக மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்துக்கு தடை
இதனிடையே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருவதால் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவு வரையிலும் வனத்துறையின் மூலம் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து 5-வது நாளாக நேற்றும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலா படகில் பயணம் செய்வதற்காக வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு நிறுத்தும் தளத்தில் நின்று கடல் மற்றும் தீவு பகுதியை வேடிக்கை பார்த்தபடி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதே போல் ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடற்கரை பகுதியிலும் வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.