ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 586 காளைகள்
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டில் 586 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டையில் ஓட்டக்குளத்தில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு காலை 8.50 மணிக்கு தொடங்கியது. ஜல்லிக்கட்டை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
அதன்பின் வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 586 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடிவீரர்கள் 120-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றுவாரியாக மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
14 பேர் காயம்
ஜல்லிக்கட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமாக கண்டுகளித்தனர். லாரிகள், சரக்கு வேன்கள் மீது ஏறி நின்றும் ஜல்லிக்கட்டை ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். காலை 8.50 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 3.20 மணி அளவில் முடிவடைந்தது.