தேனி மாவட்டத்தில் விதிகளை மீறிய 576 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிகளை மீறிய 576 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-08-23 21:15 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிகளை மீறிய 576 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

35 வாகனங்கள் பறிமுதல்

தேனி வட்டார போக்குவரத்து அதிகாரி செல்வக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 239 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிக பாரம், அதிக உயரத்தில் பொருட்கள் ஏற்றுதல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கியது, வரி செலுத்தாமல், அனுமதிச்சீட்டு இல்லாமல் இயக்கியது போன்ற விதிமீறல்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், பெரிய குற்றங்களில் ஈடுபட்ட லாரிகள், பஸ், பள்ளி வாகனம், சுற்றுலா வாகனம் உள்பட 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக அதன் ஓட்டுனர், உரிமையாளர்களுக்கு அபராத வரி மற்றும் அபராத கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமம் ரத்து

அந்த வகையில், ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 920 அபராத வரி, ரூ.11 லட்சத்து 98 ஆயிரத்து 900 அபராத கட்டணம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்து 820 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்றதாக 18 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 576 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, அதிக பாரம் ஏற்றிச் செல்வது, அரசுக்கு வரி செலுத்தாமல் செல்வது, தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, புகைச்சான்று, காப்புச்சான்று இல்லாமல் இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்