நடப்பாண்டில் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

நடப்பாண்டில் 5 0 ஆயிரம் இலவச விவசாய மின்இணைப்பு வழங்கப்படும் என்று திருச்சியில் நடந்த ரூ.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்ைம துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.;

Update:2022-07-24 01:49 IST

நடப்பாண்டில் 5 0 ஆயிரம் இலவச விவசாய மின்இணைப்பு வழங்கப்படும் என்று திருச்சியில் நடந்த ரூ.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்ைம துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

ரூ.11 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சி மாவட்ட வேளாண்மைத்துறை, ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் 3,175 பேருக்கு மொத்தம் ரூ.11 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரத்து 996 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள கலையரங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி வரவேற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகத்துறை), எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மைத்துறை), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வித்துறை) ஆகியோர் கலந்து கொண்டு துறையூரை சேர்ந்த 59 நரிக்குறவர்கள் உள்பட 3,175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

செப்டம்பர் முதல் நெல் கொள்முதல்

அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, விவசாயிகளுக்கு தேர்தல் நேரத்தில் கூறியது போல் தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறைக்குதான் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தேவையான அளவு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்கொள்முதல் நிலையங்களை செப்டம்பர் மாதம் முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசும் போது, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் தி.மு.க. அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மின்கட்டணத்தை குறைக்க விவசாயிகள் போராடிய நேரத்தில் அவர்களுக்கு தி.மு.க. ஆட்சியின் போது இலவச மின்சாரத்தை கருணாநிதி வழங்கினார். அவருடைய மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த நேரத்தில் விவசாயிகள் சேற்றில் இறங்கி வேலை செய்ததால்தான் நாம் இப்போது உணவு தட்டுப்பாடு இன்றி இருக்கிறோம் என்றார்.

50 ஆயிரம் இலவச மின்இணைப்பு

இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- கடந்த 6 மாதத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க இருக்கிறோம். அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறோம். ஆனால் காப்பீடு செய்வதும், செய்யாததும் அவர்களின் விருப்பம். நெல் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சியை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பார்வையிட்டனர்.

புள்ளம்பாடி

இதேபோல் புள்ளம்பாடியில் ரூ.2 கோடியே 41 லட்சத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஊட்டத்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் மற்றும் சிமெண்டு சாலைகள், சிறுபாலங்கள், வடிகால்கள், நிழற்குடை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 400 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் பனை விதைகள் நடும்விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை துறைக்கு புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அமைச்சர் கே.என்.நேரு ஊட்டத்தூர் கிராமத்தில் சாலை உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பனை விதைகள் நடும்விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் செல்வராசா, ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன்ராஜேந்திரன், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் ஆலீஸ்செல்வராணி உள்ளிட்ட உள்ளாட்சிபிரதிநிதிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சிமன்ற தலைவர் இந்திராஅறிவழகன் நன்றி கூறினார். மாநிலத்திலேயே ஊட்டத்தூர் ஊராட்சியில் தான் அதிக நிலப்பரப்பில் பனைவிதைகள் நடவுசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்