ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் வாசித்தனர்

கோவையில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் வாசித்தனர்.

Update: 2022-07-28 16:22 GMT

கோவை

கோவையில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் வாசித்தனர்.

திருக்குறள் வாசிப்பு

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் ஒரு அங்கமாக மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் 400 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலெக்டர் சமீரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு 20 திருக்குறளை வாசித்தனர். ஏராளமான மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி திருக்குறளை வாசித்தது பார்க்க அழகாக இருந்தது. இது குறித்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

வரலாற்று சிறப்பு

கோவையில் நடைபெறும் புத்தக திருவிழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இங்கு இலக்கிய உரை, மாணவர்களுக்கு அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி, கட்டுரைப்போட்டி, பரிசளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து மாணவர்கள் திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருக்குறள் என்பது வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷம் ஆகும். அந்த திருக்குறளில் 20 குறள்களை மாணவர்கள் வாசித்தனர். ஒழுக்கம், கல்வி, செல்வம் உள்ளிட்ட ஒவ்வொரு அதிகாரங்களை வாசித்து பார்த்தால், அது சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அதிலேயே இருக்கிறது.

பேச்சு போட்டி

இந்த திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகள், அங்கு வைக்கப்பட்டு இருக்கும் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பேச்சு போட்டி நடத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நாளை சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கொடிசியா தலைவர் திருஞானம், கோவை புத்தக திருவிழா தலைவர் விஜய் ஆனந்த், துணைத்தலைவர் ரமேஷ்கிருஷ்ணன், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்