காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில் அருகே காரில் கடத்திய 500 கிேலா அரிசியை அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பறிமுதல் செய்தனர்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே காரில் கடத்திய 500 கிேலா அரிசியை அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில் குமார், வருவாய் ஆய்வாளர் கவுதம் பெருமாள் மற்றும் ஊழியர்கள் நேற்று இரவு நாகர்கோவில் இடலாக்குடி அருகில் உள்ள குளத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குளத்தூர் பகுதியில் இருந்து வந்த கேரள மாநில பதிவு எண்ணை கொண்ட சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் அந்த காரை ஓட்டிய டிரைவர், காரை நிறுத்தாமல் கன்னியாகுமரி சாலையில் வேகமாக ஓட்டிச் சென்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை, வேறொரு காரில் துரத்தியபடி சென்றனர். சுமார் 20 கி.மீ. தூரம் சென்ற பிறகு அதாவது கன்னியாகுமரி அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர்.
உடனே காரின் டிரைவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.
அரிசி பறிமுதல்
பின்னர் அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் 15 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியை குளத்தூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.பின்னர் அதிகாரிகள் ரேஷன் அரிசியுடன் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். அரிசியை நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர். காரை நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தினர்.
மேலும் அரிசியை கடத்திய நபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? கார் யாருடையது? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் நேற்று இரவு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.