கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி, துப்பாக்கி பறிமுதல்-4 பேர் கைது

கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-03 13:38 GMT

கூடலூர்

கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுற்றி வளைத்த போலீசார்

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இரவில் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையொட்டி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) குமார் மேற்பார்வையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் திருகேஷ்வரன், பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 2 மணிக்கு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள பால்மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் கள்ளத்துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தேவாலா போலீசார் பால்மேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் துப்பாக்கியுடன் 2 மூட்டைகளை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

50 கிலோ இறைச்சி - துப்பாக்கி பறிமுதல்

தொடர்ந்து அந்த கும்பலை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது கடமான் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பால்மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல் (30), புஷ்பராஜ் (33), அருண் (26) ஆகியோர் என தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் கடமானை கள்ளத் துப்பாக்கி மூலம் வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 50 கிலோ கடமான் இறைச்சி, கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள், கத்திகள் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தேவாலா போலீசார் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

4 பேர் கைது

பின்னர் பாலகிருஷ்ணன், மைக்கேல், அருண், புஷ்பராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த 50 கிலோ கடமான் இறைச்சியை நாடுகாணி வனச்சரகர் வீரமணியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நாடு காணி வனத்துறையினர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ரகசிய தகவல் அடிப்படையில் கண்காணித்த போது கள்ளத் துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மான் இறைச்சியை கேரளாவுக்கு கடத்தி சென்று விற்கவும் திட்டமிட்டது தெரிய வந்தது. குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பின்னரே கள்ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்த முழு விபரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags:    

மேலும் செய்திகள்