தீவு முனியசாமி கோவிலில் 50 கிடாய்கள், 200 சேவல்களை பலியிட்டு கறிவிருந்து

இந்த ஆண்டுக்கான பனை தொழில் நிறைவு பெற்ற நிலையில் சாயல்குடி அருகே தீவு முனியசாமிக்கு நேர்ந்துவிட்ட 50 கிடாய்கள், 200 சேவல்களை பலியிட்டு பனை ஓலையில் பக்தர்களுக்கு கறிவிருந்து நடந்தது.

Update: 2023-10-06 18:45 GMT

சாயல்குடி,

பனை தொழில்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி, வெள்ளப்பட்டி கிராமத்தில் கடற்கரையோரத்தில் தீவு முனியசாமி கோவில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பனை தொழில் சிறப்பாக நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவித்து புரட்டாசி மாதம் இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்துகிறார்கள். அப்போது, நேர்த்திக்கடனாக கோவிலுக்கு வளர்த்து வந்த கிடாய்கள், சேவல்களை பலியிட்டு அசைவ உணவு தயாரித்து படையலிட்டு வழிபடுவார்கள். பின்னர் பக்தர்களுக்கு பனை ஓலையில் கறி விருந்து வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பனைத்தொழில் சிறப்பாக முடிந்ததையொட்டி நேற்று 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள், 200 சேவல்கள் பலியிடப்பட்டன.

பின்னர் தீவு முனியசாமிக்கு பனை ஓலை பட்டையில் படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பின்னர் கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் பனை ஓலையில் கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடற்கரையில் ஆங்காங்கே அமர்ந்து உண்டு விழாவை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு கிராமத்தலைவர் கந்தப்பழம் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன், பொருளாளர் சந்திரன், நிர்வாகிகள் சிங்கராஜா, அந்தோணி ராஜ், பால்ராஜ், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-

தொழில் சிறக்க வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பனை தொழிலை தொடங்கும் பனை தொழிலாளர்கள், தங்கள் தொழில் சிறக்க இந்த கடற்கரை கிராமத்தில் தீவு முனியசாமியை வழிபடுவோம்.

அப்போதில் இருந்து அந்த ஆண்டுக்கான பனை தொழிலை சிறப்பாக செய்து முடிந்து திரும்பி வரும் வரை தங்களை காத்தருளும்படியும், பனை தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவரவர் விருப்பப்படி கிடாய்கள், சேவல்களை தீவு முனியசாமிக்கு நேர்த்திக்கடனாக விடுவார்கள். அந்த கிடாய்கள், சேவல்களை பனை தொழிலாளர்களின் குடும்பத்தினர் வளர்த்து வருவார்கள்.

புரட்டாசி மாதத்தில் அந்த ஆண்டுக்கான பனை தொழில் நிறைவுக்கு வந்ததும், தீவு முனியசாமிக்கு தாங்கள் நேர்த்திக்கடனாக வளர்த்து வரும் கிடாய்கள், சேவல்களை பலியிட்டு கறி விருந்து படைத்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த வழிபாடு காலம், காலமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்