வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்கள் கைது
வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பெண்களை போலீசார் கைது செய்தனர்.;
பாரிமுனை வடக்கு கடற்கரை சாலையோர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சிங், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் அந்த பகுதியில் மாறுவேடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை மடக்கி பிடித்து வடக்கு கடற்கரை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் மண்ணடி கிளைவ் பேட்டரி கோபால் நகரை சேர்ந்த ஸ்டெல்லா (வயது 49), பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லைனை சேர்ந்த சவுந்தர்யா (23), மண்ணடி மூக்கர் நல்லமுத்து தெருவை சேர்ந்த சங்கரி (22), ஜோதி (47) வடக்கு கடற்கரை சாலையை சேர்ந்த கருப்பாயி (60) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரையும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 பெண்களை புழல் சிறையில் அடைத்தனர், சிறுவனை சென்னை கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ந்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான வின்சென்ட் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.