அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி: தமிழகம் முழுவதும் 16-ம் தேதி அரிசி ஆலைகள்-கடைகள் அடைப்பு...!

அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் 16-ம் தேதி அரிசி ஆலைகள்-கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.;

Update:2022-07-14 20:14 IST

சென்னை,

அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒரு நாள் அடைப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்-அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் டி.துளசிங்கம், செயலாளர் ஏ.சி.மோகன், பொருளாளர் கணேஷா அருணகிரி ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,

அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்பது ஏற்புடையது அல்ல. அரிசி என்பது அத்தியாவசிய பொருள் என்று சொல்வதைவிட, பசிபோக்கும் மருந்தாகவும் அது இருக்கிறது. இந்தியாவில் அதிகம் அரிசியை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம்தான் உள்ளது. இந்த வரிவிதிப்பால் அரிசி இயற்கை மற்றும் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதோடு, ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயரும் அபாயமும் இருக்கிறது. இதனால் சாமன்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த 5 சதவீதம் வரி உயர்வை வைத்துதான் அரசு இயங்கும் என்ற நிலை இல்லை. மற்ற வரிகளில் இதை ஈடுசெய்யலாம். இதுகுறித்து பிரதமர் முதல் சம்பந்தப்பட்ட துறைகள் வரை நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் வலியுறுத்திவிட்டோம். அதன் தொடர்ச்சியாக மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16-ந்தேதி தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்பட உள்ளன.

இதேபோல், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்களும் இதில் ஆதரவு தருகின்றனர். இந்த அடைப்பு போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்பட சில மாநிலங்களிலும் நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்