பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர் கைது
அம்மாப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்;
அம்மாப்பேட்டை அருகே வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
வாகன சோதனை
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை போலீஸ் சரக பகுதியில் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகார்சோழன் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை மேற்ெகாண்டனர். அதில் காரில் 2 கத்திகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள் தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது31), வீரசேகரன் (51), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த ராம்குமார் (33), நம்பிவயல் பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் (35), அருந்தவபுரம் கிராமத்தை சேர்ந்த மன்னர் மன்னன் ( 24) ஆகியோர் என்பதும், இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்று பெண்களை மிரட்டி வழிப்பறி செய்ததும், வீடுகளில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய வீரகற்பகவடிவேல் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.