சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதுதொடர்பாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-30 20:49 GMT

சேலம், 

தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. சேலம் சீலநாயக்கன்பட்டி விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 55). இவர் நேற்று தனது மகள்கள் அருள்சக்தி, செல்வமணி ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகம் பகுதியில் திடீரென தங்களது உடலின் மீது மண்எண்ணெயை ஊற்றினர்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் பார்வதி உள்பட 3 பேரையும் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் அவர்கள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அபகரிப்பு

போலீசாரிடம் அவர்கள் கூறும் போது, 'எங்களுக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி நிலத்தை 3 பேர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் அவர்கள் எங்களை மிரட்டுகின்றனர். இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தனர்.

இதனிடையே எடப்பாடி தாலுகா இருப்பாளி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி (62), அவருடைய மனைவி சாந்தி (56) ஆகிய இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்களது மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வழக்குப்பதிவு

போலீசாரிடம் கந்தசாமி கூறும் போது, 'எனக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தில் குடிசை போட்டுள்ளோம். இந்த நிலையில் அந்த குடிசையை உறவினர் ஒருவர் அகற்றிவிட்டு நிலத்தை அபகரித்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பார்வதி, அருள்சக்தி, செல்வமணி, கந்தசாமி, சாந்தி ஆகிய 5 பேர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்