5 பேர் மரணம்: தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் - எல்.முருகன்
விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
சென்னை,
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்குள்ளாகினர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் மரணம் வருத்தம் அளிக்கிறது. போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது என்றார்.