தையல் தொழிலாளி கொலையில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவண்ணாமலையில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருவண்ணாமலையில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தையல் கடைக்காரர்
திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54), தையல் தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவன்பாளையம் நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி வந்த மர்ம நபர்கள் தாமரை நகர் அருகில் ஆறுமுகத்தை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைந்து வைத்திருந்த அரிவாளால் திடீரென அவரை சராமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் தண்டராம்பட்டு அருகில் உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பரந்தாமன் உள்பட கூலிப்படையை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
ஆறுமுகம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள வரகூரை சேர்ந்த பரந்தாமன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல், மோசஸ், தமிழரசன், கலசபாக்கம் சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் முருகேஷிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பரந்தாமன், இசக்கியல், மோசஸ், தமிழரசன், பாரதி ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.