ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டதில் 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு - கணவன் வெறிச்செயல்
மது போதையில் இருந்த பாண்டியன் ஆத்திரத்தில், ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து மனைவியை காலால் எட்டி உதைத்து தள்ளியுள்ளார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் 5 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் பேருந்திலிருந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞருக்கும் நத்தம் கல்வேலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது வளர்மதி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தாய் வீட்டிற்கு தனது கணவனுடன் பேருந்தில் பயணித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது போதையில் இருந்த பாண்டியன் ஆத்திரத்தில், ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து மனைவியை காலால் எட்டி உதைத்து தள்ளியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன வளர்மதி பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.