போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மோசடி - வாலிபர் கைது
போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை கொளத்தூர் பெரியதேவி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன் (வயது 32). இவர், சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பெண் மேலாளர் பிரிசில்லாவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "நான் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் எனது 321 கிராம் நகையை அடமானம் வைத்து உள்ளேன். உங்கள் நிறுவனத்தில் எனக்கு நகை கடன் கொடுத்தால் அந்த நகையை மீட்டு உங்களிடம் அடமானம் வைக்கிறேன்" என்று கூறியதுடன், அது தொடர்பாக போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களையும் காண்பித்தார்.
அதை உண்மை என்று நம்பிய மேலாளரும், பிரசன்ன வெங்கடேசன் கேட்டபடி ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகை கடன் வழங்கினார். அந்த பணம் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு சொன்னபடி பிரசன்ன வெங்கடேசன் தனியார் வங்கியில் இருந்து நகையை மீட்டு, நிதி நிறுவனத்தில் அடகு வைக்க வரவில்லை.
சந்தேகம் அடைந்த நிதி நிறுவன மேலாளர், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள், பிரசன்ன வெங்கடேசன் கொடுத்த வங்கியின் முகவரியில் சென்று விசாரித்த போது அதுபோல் யாரும் அங்கு நகையை அடகு வைக்கவில்லை எனவும், வங்கி கணக்கும் இல்லை என்பதும் தெரியவந்தது.
பின்னர்தான் பிரசன்ன வெங்கடேசன் நூதன முறையில் போலி ஆவணங்களை காட்டி தங்கள் நிதி நிறுவனத்தில் பணம் மோசடி செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவன பெண் மேலாளர் பிரிசில்லா வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னா வெங்கடேசனை கைது செய்தனர். விசாரணையில் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இதுபோல் மோசடியில் ஈடுபடுவதையே வேலையாக கொண்டிருந்ததும் தெரிந்தது.