350-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி மோசடி

Update: 2022-06-16 16:50 GMT


முதலீடு செய்த பணத்துக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி திருப்பூரில் 350-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

ரூ.5 கோடி மோசடி புகார்

திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் (வயது 48) மற்றும் தமிழ்செல்வன் (46) என்பவர்கள் திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்களின் முகவர்களாக இருந்தனர். அவர்கள் மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, மளிகை கடை, காய்கறி கடை, பிரியாணி கடை, பால் பண்ணை என பல தொழில்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரராக சேர்த்து, கொடுக்கும் முதலீட்டுக்கு இரட்டிப்பு பணம் தருகிறோம் என்றார்கள்.

இதனை நம்பி 350-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ரொக்கமாக ரூ.4 கோடியே 60 லட்சம் மற்றும் வங்கி கணக்கு மூலமாக ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடியே 18 லட்சம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளோம். தற்போது பணத்தை தராமல் அந்த நிறுவனத்தினர் எங்களை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். எனவே எங்கள் பணத்தை மீட்டு எங்களை வாழ வைக்க வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இரட்டிப்பு பணம்

மகளிர் குழுக்களை ஏற்படுத்தி, அதற்கு முகவர்கள் நியமித்து அவர்கள் மூலமாக 2 நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டு தொகையை பெற்று 10 மாதத்தில் இரட்டிப்பு தொகை கொடுப்பதாக தெரிவித்ததால் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அதை நம்பி அதிகம் பேர் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முதன்மை முகவர் வெளிமாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த முகவரின் கீழ் பணத்தை முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்