திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பின்னலாடை தொழில்
திருப்பூரில் பின்னலாடை தொழில் நிமித்தமாக நைஜீரிய நாட்டினர் தங்கி இருந்து அவர்களின் சொந்த நாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைக்கின்றனர். சிலர் இங்கேயே நிறுவனம் அமைத்து ஆடை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு திருப்பூர் வரும் நைஜீரியர்கள், விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேலும் தங்கி இருக்கிறார்கள். இவ்வாறு விதிமீறி உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக திருப்பூர் ரெயில் நிலையம், ராயபுரம், காதர்பேட்டை பகுதியில் நைஜீரியர்கள் அதிகம் தங்கியிருக்கிறார்கள். திருப்பூர் வடக்கு போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நைஜீரியர்களை கண்காணித்து வருகிறார்கள். நேற்று முன் தினம் மாலை ராயபுரம் நஞ்சப்பா பள்ளி அருகே உள்ள பகுதிகளில் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
4 பேர் கைது
அப்போது அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நைஜீரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் உரிய ஆவணங்கள் கையில் இல்லாத 6 பேரை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்களது ஆவணங்கள் வெளியூரில் நண்பர்களிடம் இருப்பதாக தெரிவித்தனர். ஆவணங்களை எடுத்துவர காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 4 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நைஜீரிய நாடு அனம்பரா பகுதியை சேர்ந்த ஓபினோ (வயது 41), ஆபம் பாஸ்கல் (33), அபாஸ் ஸ்டேட் பகுதியை சேர்ந்த ரிச்சர்டு உபா (40), இமோஸ் பகுதியை சேர்ந்த ஜான்பால் நமீகா (34) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 4 பேரையும், உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கியதற்கான வெளிநாட்டினர் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.