49-வது நினைவு தினம்: காமராஜர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி

காமராஜரின் 49-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2023-10-02 20:44 GMT

சென்னை,

பெருந்தலைவர் காமராஜரின் 49-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காமராஜர் நினைவிடத்தில் தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது சமத்துவ மக்கள் கழக இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பொருளாளர் கண்ணன், தலைவர் தங்கமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க. சார்பில் கட்சியின் இலக்கிய அணி மாநில துணை செயலாளர் இ.சி.சேகர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் துரைப்பாக்கம் வி.எஸ்.வேல் ஆதித்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் - பா.ஜ.க.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் காளிதாஸ், தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் நாச்சிகுளம் சரவணன் உள்பட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில நிவாகிகள் இளஞ் சேகுவாரா, ந.செல்லத்துரை, சுபாஷ், செல்வம், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சைதை மா.ஜேக்கப், பா.ம.க. சார்பில் துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட நிர்வாகிகளும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம், மாநில பொருளாளர் ஏ.எம்.சுந்தரேசன், தே.மு.தி.க. சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பார்த்தசாரதி, நல்லதம்பி, நடிகர் ராஜேந்திரன், தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு தலைவி சிம்லா முத்துச்சோழன், த.மா.கா. சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், கொள்கை பொறுப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் ரமேஷ் குமார், பொருளாளர் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பாளர் சந்தானம், ம.பொ.சி. பேரன் செந்தில், ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வியாபாரிகள் - நாடார் சங்கம்

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, பெரம்பூர் த.பத்மநாபன், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தேசிய நாடார் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் ஜி.மெல்வின், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் உள்பட திரளான நாடார் அமைப்பினரும் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

தேனி பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்