48 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா

தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

Update: 2022-11-10 19:30 GMT

தாரமங்கலம்:-

தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

வீட்டுமனை பட்டா

தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் 48 நரிக்குறவர் இனமக்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நரிக்குறவர் இனமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 400 குடும்பங்கள் வசிக்கும் வகையில் நரிக்குறவர் இன மக்களுக்காக வீடுகள் கட்டிக்கொடுத்தார். இன்றளவும் அவர்கள் அனைவரும் அதே இடத்தில் நல்ல பொருளாதார முன்னேற்றத்துடன் பொறியாளர்களாகவும், பல்வேறு வேலைவாய்ப்புகளிலும் பணியாற்றி வசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவரின் வீட்டிற்கு சென்று உணவு அருந்தி குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தார்ச்சாலை அமைத்து கொடுத்தார். ஆரூர்பட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரிக்குறவர் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வு

அதைத்தொடர்ந்து தாரமங்கலம், பாப்பம்பட்டி ஊராட்சி, தச்சான்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.12 கோடியே 22 கோடி மதிப்பீட்டில் 244 புதிய வீடுகளுடன் மறுவாழ்வு முகாம் கட்டடப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாஜலம், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆரூர்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் வீரம்மாள் காங்கேயன், தாசில்தார் வள்ளமுனியப்பன், தாரமங்கலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்