ரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி

சீர்காழியில் ரூ.47 லட்சத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

Update: 2023-09-24 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் ரூ.47 லட்சத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

தமிழிசை மூவர் மணிமண்டபம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு நிதியின்கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், தில்லையாடியில் பிறந்த அருணாசலக்கவிராயர் மற்றும் தில்லைவிடங்கன் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2000-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 2010-ம் ஆண்டு ரூ.1 ½ கோடி மதிப்பீட்டில் சீர்காழியில் 0.44 ஏக்கர் பரப்பளவில் 358.80 சதுர மீட்டர் பரப்பளவில் ஏழு கலசங்களுடன், எந்த திசையிலிருந்தும் தமிழிசை மூவரை காணும் வகையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது

ரூ.47 லட்சத்தில்...

தற்போது இந்த மணிமண்டபத்தில் ரூ.47 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் சிறப்பு பழுது பார்க்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தளவாட பொருட்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றார்.

தொடர்ந்து, சீர்காழியில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் குடியிருப்பு கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு கட்டிடத்தின் தரத்தினை ஆய்வு செய்தார். பணிகளை தரமாக மேற்கொண்டு ஒப்பந்த கால கெடுவிற்குள் முடித்து கொடுக்க செயற்பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்); பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் .ராமர், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ஒப்பந்தக்காரர் விஜி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்