கூட்ட நெரிசலை பயன்படுத்தி 9 பெண்களிடம் 42 பவுன் நகை பறிப்பு

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி 9 பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-08 20:42 GMT

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி 9 பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சித்திரை திருவிழா

மதுரையில் சித்திரை திருவிழாவின் தொடர்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில் கள்ளழகரை தரிசிப்பதற்காகவும், திருவிழாவை பார்ப்பதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கூட்டம், கூட்டமாக வந்து சென்றனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, செல்போன்கள் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட 6 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அரங்கேறியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 4-ந்தேதி கள்ளழகர் எதிர்சேவை நடந்த சமயத்தில், கள்ளழகரை தரிசிக்க வந்த பெண்கள் 9 பேரிடம் 42 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (வயது 60), சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.

இதுபோல் தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (52), ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது. புதூர் மண்மலை மேடு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமியிடம், 3 பவுன் நகை பறிக்கப்பட்டது.

5 மணி நேரத்திற்குள்...

மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60), டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள் (74), தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதியில் வந்தபோது அவரது 4 பவுன் நகை பறிபோனது. மதுரை ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவிடம், 5 பவுன் நகை, ஆனையூர் செந்தூர் நகர் மனைவி நாகம்மாளிடம் 3 பவுன் நகை, வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகத்திடம் 9 பவுன் நகையும், மதுரை திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தியிடம் 2 பவுன் நகையும் பறிக்கப்பட்டது.

தல்லாகுளம் பகுதிகளில் 5 மணி நேரத்திற்குள் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இந்த அனைத்து சம்பவங்களிலும் ஈடுபட்டது 2 பேர் என்பது தெரியவந்தது.

2 பெண்கள் கைது

இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டையை சேர்ந்த பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்