பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீ. மழை: குளம் போல தேங்கி நிற்கும்தண்ணீரால் தத்தளிக்கும் வாகனங்கள்- நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீ. மழை பெய்தது. செட்டிதோப்பு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீரால் வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-14 22:58 GMT

பெருந்துறை

பெருந்துறையில் ஒரே நாளில் 42 மி.மீ. மழை பெய்தது. செட்டிதோப்பு பகுதியில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீரால் வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்கும் மழைநீர்

பெருந்துறையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் பகலில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை நிலவரப்படி ஒரே நாளில் மட்டும் 42 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் பெருந்துறை-ஈரோடு ரோடு செட்டிதோப்பு பகுதியில் ரோட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் சுமார் 2 அடி ஆழத்துக்கு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

4 வழிச்சாலையான ஈரோடு ரோட்டில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீரில் தத்தளித்தபடி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் அனைவரும் உடைகள் முழுவதும் மழைநீரால் நனைந்தபடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ஒரு சிறு மழை பெய்தாலும், ஈரோடு ரோட்டில் உள்ள செட்டி தோப்பு பகுதியில் மழைநீர் குளம் போல தேங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கோரி பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடமும், மாநில நெடுஞ்சாலைதுறையினரிடமும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரி இரு சக்கர வாகன ஓட்டிகள், செட்டி தோப்பு பகுதியில் வாகனங்களை ஓட்டிச் செல்ல அச்சப்படுகிறார்கள். தூரம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என்று மாற்று வழிகளில் தங்களது வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இந்த நிலை கடந்த 3 நாட்களாக நீடித்து வருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பெருந்துறை - ஈரோடு ரோடு 4 வழிச்சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறை நெடுஞ்சாலைதுறையினர் நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்