கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பில் 40 சதவீத பணிகள் நிறைவு

பொதுமக்களுக்கு குடிநீர் வசதி என்பது அத்தியாவசியமானது. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டு விட்டன.

Update: 2022-10-11 19:14 GMT

ஜல் ஜீவன் திட்டம்

கிராமப்புறங்களை பொறுத்தவரை அந்த ஊரில் உள்ள குடிநீர் திட்டம் மூலம் தான் குடிநீர் வசதி உள்ளது. மேலும் சில கிராமங்களில் ஊரணி, கிணறுகள், குளங்கள் மூலம் குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல குக்கிராமங்களில் தண்ணீர் வசதி என்பது இல்லாமல் உள்ளன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2109-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.

தமிழகத்திற்கு விருது

இந்த நிலையில் 60 சதவீதத்திற்கு குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களில், இந்த திட்ட செயல்பாடுகள் மூலம் மிகச்சிறப்பாக செயல்பட்டதில் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்து சமீபத்தில் விருது கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்குவதில் 40 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

இத்திட்டம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 497 ஊராட்சிகளில் 4 ஆயிரத்து 62 குக்கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் அவர்களது வீட்டின் முன்பே கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 666 வீடுகளில் 52 ஆயிரத்து 109 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்படுகிறது.

குடிநீர் குழாய்கள் இணைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் 809 கிராமங்களில் 95 ஆயிரத்து 911 வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கான செலவு ரூ.105 கோடியே 28 லட்சம் ஆகும். இதேபோல் 2021-2022-ம் ஆண்டில் 555 கிராமங்களில் 21 ஆயிரத்து 614 வீடுகளுக்கு ரூ.26 கோடியே 88 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 2022-2023-ம் ஆண்டில் 81 கிராமங்களில் 8 ஆயிரத்து 638 வீடுகளுக்கு ரூ.11 கோடியே 22 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் பணிகள் முடிக்கப்படும்'' என்றார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

இத்திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளை அந்தந்த ஊராட்சியே தேர்வு செய்கிறது. அவர்களது வீட்டின் முன்பு குடிநீர் குழாய் வைத்து, அதில் தண்ணீர் பிடிப்பதற்காக சிமெண்டு தளமும் அமைக்கப்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரம் கணக்கிட்டு மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்கனவே உள்ளதா? அல்லது புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் உள்ளதா? ஆழ்துளை கிணறு புதிதாக அமைக்க வேண்டி உள்ளதா? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தேவை அறிந்து செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினால் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க செல்லும் அலைச்சல் குறைந்துள்ளது. புதுக்கோட்டை அருகே கவிநாடு கிழக்கு ஊராட்சியில் ஆட்டாங்குடி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் எளிதில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.

அலைச்சல் குறைந்தது

இதுகுறித்து ஆட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த சரசு கூறுகையில், ''எனது வீட்டின் முன்பே தற்போது குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த தண்ணீரை தான் குடிக்க பயன்படுத்துகிறோம். மேலும் சமையலுக்கும், குளிப்பதற்கும், வீட்டு தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம். முன்பு தண்ணீர் பிடிப்பதற்காக குடங்களை தூக்கிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். தற்போது அந்த அலைச்சல் குறைந்துள்ளது. தினமும் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினை இல்லை'' என்றார்.

சசிகலா கூறுகையில், ''இத்திட்டத்திற்கு முன்பு பொதுக்குழாயில் தான் தண்ணீர் பிடிப்போம். அப்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் தண்ணீர் வரும். அந்த தண்ணீரையும் பிடிக்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அவதி அடைந்து வந்தோம். தற்போது இந்த திட்டத்தின் மூலம் வீட்டிற்கே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது பயனுள்ளதாக உள்ளது என்றார்.

ரூ.5 கோடி நிலுவை:

பங்களிப்பு தொகையை செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்- அதிகாரிகள் வலியுறுத்தல்

ஜல் ஜீவன் திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தலா 45 சதவீதமும், பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவீதமும் உள்ளன. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இலக்கு. ஒரு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலம் காலை அல்லது மாலை நேரங்களிலோ, தேவைக்கேற்ப சராசரியாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது அந்த கிராமத்தில் பொதுப்பிரிவினர் அதிகமாக இருந்தால் அக்கிராமம் பொதுப்பிரிவு கிராமமாக கணக்கிடப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு தொகை 10 சதவீதமாக கணக்கிடப்படும். இதேபோல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பங்களிப்பு தொகை 5 சதவீதமாகும். இந்த தொகையானது குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் ஒவ்வொரு வீடுகளிலும் வசூலிக்கப்படும். இதில் மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இத்திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொகை ரூ.5 கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகையை செலுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இத்திட்டம் இலவச திட்டம் என பொதுமக்கள் மத்தியில் பரவியதால் அவர்கள் இத்தொகையை செலுத்த மறுத்து வருகின்றனர். இந்த பங்களிப்பு தொகையானது பொதுமக்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை பாதுகாப்பாக வைத்தல், பராமரித்தல் உள்ளிட்டவற்றில் அவர்களுக்கும் கடமை உள்ளது என்பதை உணர்த்துவதற்காக தான் இத்தொகை வசூலிக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் செலுத்த வேண்டும்'' என்றனர்.

14 ஊராட்சிகளில் 100 சதவீத பணி நிறைவு

ஜல் ஜீவன் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் உள்ள கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் பெரியலூர், வேம்பங்குடி மேற்கு, கே.ராயபுரம், கண்ணங்காரகுடி, முனசந்தை, திருவாக்குடி, பிசானந்தூர், துருசுப்பட்டி, வாழமங்கலம், களமாவூர், அரவம்பட்டி, அரியானிப்பட்டி, ராமசாமிபுரம், பி.அழகாபுரி ஆகிய 14 ஊராட்சிகளில் 100 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

குடிநீர் பரிசோதனை

இத்திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரானது குளோரின் கலந்து சுகாதாரமான முறையில் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக உள்ளதா? என அவ்வப்போது அந்தந்த கிராமங்களில் சோதனையிடப்படுகிறது. இதற்காக மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீரை சோதனையிடுவதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்