கோத்தகிரியில் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடந்த சிறப்பு முகாமில், கோத்தகிரியில் 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கோத்தகிரி,
இந்திய தேர்தல் ஆணையமானது நாடு முழுவதும் திருத்திய சரியான புதிய வாக்காளர் பட்டியல்களை வெளியிடுவதற்கு அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, கோத்தகிரி தாலூகாவிற்கு உட்பட்ட 108 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக பொதுமக்களுக்கு 6 பி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை தவறில்லாமல் சரியாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கோத்தகிரி முழுவதும் நடைபெற்ற முகாம்களை தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காயத்ரி, உதவி தேர்தல் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாமில் மொத்தம் 4 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அவை உடனடியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.