மூதாட்டி கொலை-கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

மூதாட்டி கொலை-கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-10 19:47 GMT

தொட்டியம்:

மூதாட்டி கொலை

தொட்டியம் மதுரா நகரை சேர்ந்த கருப்பண்ணனின் மனைவி ராஜேஸ்வரி(வயது 65). இவர் கடந்த மே மாதம் 17-ந் தேதி கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் இருந்த 63 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் முசிறி அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களான தொட்டியம் வள்ளுவத்தெருவை சேர்ந்த சந்திரசேகரனின் மகன் கிருஷ்ணன் என்ற பில்லா(20), மணமேடு விஸ்வநாதன் மகன் ஆறுமுகம் என்ற நாட்டாமை (20), அலகரை ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ் (19) மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சித்தூர் ராஜாராமன் மகன் விக்ரம் (20) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நோட்டமிட்டனர்

விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்ததாவது:- தொட்டியம் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பில்லா, இவரது தாய் ஆனந்தி ஆகியோர் ராஜேஸ்வரிடம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கடன் பெற்று, திருப்பி அடைத்துள்ளனர். அப்போது கடனை தாமதமாக அடைத்ததால், ஆனந்தியை ராஜேஸ்வரி திட்டியதாக தெரிகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், மோகன்ராஜ், விக்ரம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ராஜேஸ்வரியின் வீட்டை பல நாட்களாக நோட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருப்பதை அறிந்த அவர்கள், அவரிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்களை பார்த்த ராஜேஸ்வரி சத்தம் போட்டதால், அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதில் அவர் மயங்கினார்.

நகை-பணம் கொள்ளை

இதையடுத்து அவரது வாயில் துணியை திணித்து, கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 2 நாட்களுக்கு பிறகு பார்த்தபோது, அந்த வீடு திறந்து கிடந்ததை கண்ட அவர்கள், அன்று இரவு மீண்டும் அங்கு சென்றுள்ளனர். அப்போது ராஜேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு மிளகாய் பொடியை தூவிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர்.

பின்னர் கொள்ளையடித்த நகைகளையும், பணத்தையும் 4 பேரும் பிரித்துக் கொண்டனர். இதையடுத்து கிருஷ்ணன் தொட்டியத்தில் உள்ள ஒரு கடையில் நகையை அடகு வைத்தபோது, சந்தேகம் அடைந்த கடைக்காரர் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் வானப்பட்டறை அருகே கிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவரது கல்லூரி நண்பர்கள் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்துள்ளனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், முசிறி துணை சூப்பிரண்டு யாஸ்மின் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைதான 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 40 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ஆகியவற்றை மீட்டதோடு, ஒரு கார், 86 கிராம் வெள்ளிப்பொருட்கள், ஒரு ஐ போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்