சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது

பெரியகுளம் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2023-02-15 19:00 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பொட்டுமடம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் வேலி பகுதியில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தோப்பில் தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த மூர்த்தி (வயது 50) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காவலாளி மூர்த்தி உள்பட 6 பேர் சேர்ந்து அந்த தோப்பில் இருந்த சந்தன மரத்தை வெட்டினர். பின்னர் அதனை 6 துண்டுகளாக வெட்டி ஒரு சாக்குபையில் வைத்து கடத்த முயன்றனர். இதனை நடுப்புரவு விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் டேவிட் ராஜா தலைமையில் வனஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் 2 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த 18 கிலோ சந்தன மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தி, தேவதானப்பட்டி மேட்டுவளவை சேர்ந்த அழகர் (57), பெரியகுளத்தை சேர்ந்த பாலு (48), அன்பு (43) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்கள் தேவதானப்பட்டியை சேர்ந்த தங்கராசு (38) பெரியகுளத்தை சேர்ந்த ராஜாமணி (60) என்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்