கோவை
கோவையில் இளைஞர், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதை மாத்திரைகள்
கோவை மாநகர பகுதியில் போதை மாத்திரைகள் நடமாட்டத்தை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் போதை மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துதான் இருக்கிறது.
கடந்த மாதத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த வாரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் போதை மாத்திரை விற்பனையை முழுமையாக தடுக்க முடியவில்லை. வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதைக்காக பயன்படுத்துவதால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவதால் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள கழிவுநீர் பண்ணை பகுதியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரியக்கடை வீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
4 பேர் கைது
அப்போது அங்கு இருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், அதேப்பகுதியை சேர்ந்த முகமது நவாஸ் (வயது 23), முகமது தாரிக் (20), கார்த்திகேயன் (27), அய்யனார் (23) ஆகியோர் என்பதும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள், அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
ஒரு மாத்திரை ரூ.200-க்கு விற்பனை
கோவை மாநகர பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாரும் மருந்துகள் கொடுப்பது இல்லை. ஆன்லைனில் ஆர்டர் வாங்கினால் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயமும் ஏற்பட்டு உள்ளது.
எனவே தற்போது கைதான 4 பேரும் கர்நாடக மாநிலத்துக்கு சென்று அங்குள்ள கடைகளில் ஒரு மாத்திரை ரூ.30 என்ற அடிப்படையில் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி வைத்து உள்ளனர். அதில் இங்கு ஒரு மாத்த்திரையை அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்து இருக்கிறார்கள்.
தீவிர விசாரணை
அவர்கள் எத்தனை மாத்திரை வாங்கி வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்து ரூ.150 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருமே இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்துதான் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
எனவே அவர்கள் யார் மூலம் இந்த மாத்திரைகளை வாங்கினார்கள்? யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.