சுங்கச்சாவடி பணியாளர்கள் போராட்டத்தில் மேலும் 4 பேருக்கு உடல்நலக்குறைவு
சுங்கச்சாவடி பணியாளர்கள் போராட்டத்தில் மேலும் 4 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடவடிக்கைகாக தலா 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த 4-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஏற்கனவே 2 பணியாளர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுங்கச்சாவடி பணியாளர்களான எறையூர் கிழக்குத்தெருவை சேர்ந்த தர்மராஜா (வயது 32), தெற்கு தெருவை சேர்ந்த அசோக்ராஜ் (33), மங்களமேடு இந்திரா நகரை சேர்ந்த செல்வம் (38), திருமாந்துறை அண்ணா நகரை சேர்ந்த ஸ்டாலின் (36) ஆகிய 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுங்கச்சாவடிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் இதற்கு தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) உரிய தீர்வு எட்டாவிடில், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோக்கள் மற்றும் சாலையோர கடைகள் இயங்காது என்று தெரிவித்தனர்.