4 வழிச்சாலைக்கான அளவீட்டுப்பணி தீவிரம்
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.;
கரூர்-கோவை சாலை
கரூர்-கோவை வரையிலான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே இருந்த சாலை அகலப்படுத்தப்பட்டு இப்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் வாகனங்கள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி வருவதால் சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படுகிறது. அந்தவகையில் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் குறிப்பிட்ட தூரத்திற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலை அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அளவீடு
தற்போது உள்ள சாலையின் அகலம், சாலையின் தரம், நான்கு வழிச்சாலையாக மாற்றினால் தேவைப்படும் நிலம் எவ்வளவு, வளைவு பகுதியாக இருந்தால் நேராக மாற்றுவது, விபத்து பகுதி என்றால் மாற்று ஏற்பாடு செய்வது, வளர்ந்து வரும் இடம் என்றால் மேம்பாலம் அமைப்பது என்பது போன்ற பல்வேறு தகவல்களுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளவீடு செய்யப்பட்டு வருகிறது. கரூரிலிருந்து கோவை வரையிலான இந்த சாலையை அளவீடு செய்து முடித்தவுடன் திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பித்த பின்பு, நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.