4½ லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

வேலூர் மாவட்டத்தில் 4½ லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-08-14 11:37 GMT

குடற்புழு நீக்க மாத்திரை

தேசிய குடற்புழு நீக்க நாள் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தி குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. ரத்தசோகை பிரச்சினை இருக்காது. மேலும் ரத்தசோகையால் ஏற்படும் பின்விளைவுகளில் இருந்து பாதுகாக்கிறது.

4½ லட்சம் பேருக்கு

வேலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 3,51,998 பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுடைய 1,03,112 பெண்களுக்கும் என மொத்தம் 4,55,110 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், மாவட்டத்தில் 7,68,762 மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்